சிறு வயதில் வேதாகமத்தை கிழித்து நெருப்பிலிட்டுக் கொளுத்தும் அளவுக்கு கிறிஸ்த்தவ நம்பிக்கை மீது வெறுப்பு கொண்டிருந்தவர் சுந்தர் சிங்.
ஆயினும் திருத்தூதர் பவுலை சந்தித்தது போல, இயேசு இரட்சகர் சுந்தர் சிங் அவர்களையும் தடுத்தாட்க் கொண்டு அவரை அற்புதவிதமாய் மாற்றினார்.
இளம் வயதில் நேசத் தாயின் மரணம், ஆதரவற்ற வெறுமை உணர்வு ஆகியவற்றால் தற்கொலை செய்யும் எண்ணத்தோடு இருந்த சுந்தர் சிங் மனதை மாற்ற தரிசனம் தந்து தம்முடைய ஊழியராகவும் மாற்றினார்.
சாது சுந்தர் சிங் கிறிஸ்துவைத் தன்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்ட பின்பாகத் தன்னுடையப் பெற்றோர்களாலும் உறவினர்களாலும் வெறுக்கப்பட்டார்.
சாது சுந்தர் சிங்கிடம் அவருடையப் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வந்து கிறிஸ்துவை மறுதலித்து விடும்படிக் கூறினர்.ஆனால் அவரோ நான் கிறிஸ்துவைத் தான் பின்பற்றுவேன் என்று உறுதியாகக் கூறினார். ஒரு நாள் சாது சுந்தர் சிங் வெளியேச் சென்று தன்னுடைய நீளமான முடியை வெட்டிக் கொண்டு வந்தார். அதைப் பார்த்த சாது சுந்தர் சிங்கின் தகப்பனார் கோபத்துடன் சுந்தரிடம் வீட்டை விட்டு வெளியேறும் படி கூறினார். அன்று இரவு சாது சுந்தர் சிங்கின் உணவில் விஷத்தை கலந்து அவருக்குச் சாப்பிடக் கொடுத்தனர். அவர் இரவு உணவை உண்ட பின்பாக அவரை வீட்டை விட்டு விரட்டி விட்டனர். உணவில் விஷம் கலக்கப்பட்டது தெரியாமல் இவரும் இரயிலில் பயணம் மேற்கொண்டார். இரயிலில் மயங்கி விழுந்த அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர் இவர் கடவுளின் அருளால் தான் பிழைத்தார் என்று சாட்சி பகர்ந்தார்.
சாது சுந்தர் சிங் என்ற பெயரில் காவி உடை தரித்து இந்திய கிறிஸ்தவ துறவியாகி, எங்கும் நடந்தே சென்று நற்செய்தி அறிவித்தார். தன் ஊழியத்திற்கு திருமண பந்தம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கில் முழுவதுமாக இறைப்பணிக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஊழியர் இவர்.
சிறையில் அடைக்கப் பட்ட போதும், பாதாள கிணற்றில் தள்ளப்பட்ட போதும் கொஞ்சமும் பின்வாங்காமல் ஆபத்து நிறந்த திபெத் மலைப் பகுதிகளில் கூட ஆண்டவருடைய ஊழியத்தைச் செய்து வந்தார்.
இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் அவர் தன் விசுவாசத்தை அறிக்கையிட்டிருக்கிறார்.இருபதாம் நூற்றாண்டின் வல்லமையான ஒரு தேவ ஊழியர் இவர். எந்த சபையினையும் சாராத ஊழியராயினும், எல்லாச் சபையினரோடும் இணைந்து ஊழியம் செய்தவர் இவர்.
பல முறை மரணத்தின் அருகில் சென்ற சாது சுந்தர் சிங்கைக் காப்பாற்றிய தேவன் அவரை இந்திய தேசம் மட்டுமல்லாது சீன மற்றும் இலங்கை தேசத்திலும் அவரை வல்லமையாகப் பயன்படுத்தினார். இந்திய தேசத்து அப்போஸ்தலன் என்று மக்களால் போற்றப்பட்டார்.